புதுடெல்லி: நாட்டின் முதல்நிலை மல்யுத்த வீரர்களின் போராட்டத்தால் கடந்த நான்கு மாத காலமாக மல்யுத்த விளையாட்டின் செயல்பாடு முடங்கி உள்ளதாக பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார். இதற்காக வேண்டி தன்னை தூக்கிலிட்டாலும் பரவா இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் டெல்லியில் போராடி வருகின்றனர்.
“நாட்டில் கடந்த நான்கு மாத காலமாக மல்யுத்த விளையாட்டு சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. என்னை தூக்கிலிடுங்கள் என சொல்கிறேன். ஆனால், ஒருபோதும் மல்யுத்த விளையாட்டின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டாம். இளம் வீரர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, திரிபுரா என மல்யுத்த விளையாட்டு போட்டிகளை யார் ஏற்பாடு செய்தாலும் அதில் வீரர்களை பங்கேற்க அனுமதியுங்கள். இதனால் இளம் வீரர்களின் வயது விரயமாகும்.
மல்யுத்த வீரர்கள், அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பிடம் நான் ஒரு கோரிக்கையை வைத்துக் கொள்கிறேன். தயை கூர்ந்து மல்யுத்த செயல்பாடுகளை இயல்புக்கு கொண்டு வர வேண்டும். அப்படி இல்லையெனில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அதை நடத்தும்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களது போராட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆதரவை வழங்கி உள்ளார். இது தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாவை போராட்டம் நடைபெற்று வரும் ஜந்தர் மந்தர் மைதானத்திற்கு நேரில் அனுப்பி ஆதரவு தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.