நலமுடன் வீடு திரும்பிய பாலா : ரசிகர்களுக்கு நன்றி சொன்னார்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சிவாவின் தம்பியும், அம்மா அப்பா செல்லம், வீரம் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகருமான பாலா, தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு கட்டாயம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து அவருக்கு சமீபத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
அறுவை சிகிச்சை நடப்பதற்கு முன்னதாக ரசிகர்களுக்கு வீடியோ மூலம் பேசிய பாலா, இந்த சிகிச்சைக்குப் பிறகு நான் உங்களை சந்திக்க முடியாமலேயே கூட போகலாம். எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று உருக்கமாக பேசி இருந்தார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவர் நலம்பெற தங்கள் பிரார்த்தனைகளை தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. அப்போது மருத்துவமனையில் இருந்தபடியே தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சிகிச்சை நலமுடன் முடித்ததாக தெரிவித்தார் பாலா.
இந்த நிலையில் தற்போது முற்றிலும் குணமாகி வீடு திரும்பியுள்ள பாலா, தனது ஹேர்ஸ்டைல், தாடி என அனைத்தையும் மாற்றி புதிய பொலிவுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுடன், தான் குணமாக பிரார்த்தித்த நண்பர்கள் ரசிகர்கள் என அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.