சென்னை: மே தினத்தையொட்டி, தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே தினத்தில், நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.
திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத் திட்டங்களை அக்கறையுடன் நிறைவேற்றி, தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றமும், நிம்மதியும் ஏற்பட அயராது பாடுபட்டு வருகிறோம். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால், தொழிலாளர் உரிமைக்காக தொடர்ந்து போராடி இருக்கிறோம்.
மே தினத்துக்கு ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை, தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ், ஊக்கத்தொகை, ஏழை வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம், கருவுற்ற பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி, தொழிலாளர் குடும்பங்களுக்கு கிலோ ரூ.1-க்கு அரிசி, கலைஞர் காப்பீடு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது திமுக ஆட்சிதான். தொழிலாளர் நலன் காக்க திமுக எப்போதும் பாடுபடும்.
சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி: உழைப்பே உயர்வு தரும், மன நிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன், தளர்வறியா உழைப்பின் மூலம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நல்வழியில், எனது நெஞ்சார்ந்த மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உழைப்பின் வலிமையை, தொழிலாளர்களின் தியாகத்தை உணர்த்தும் வகையில் உழைப்பாளர் தினம் கொண்டாடும் அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: தொழில் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் தொடர்ந்து பாடுபடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துகள். பிரதமர் மோடி, தொழிலாளர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். பாஜக என்றும் தொழிலாளர் நலன் காக்க துணை நிற்கும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தொழில் வளர்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பால் தொழிலாளர் வாழ்வில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், உரிமைக் குரல் எழுப்பும் நாளாக மே தினம் அமைய வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதியேற்போம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்ட, சமத்துவ சமூகத்தை உருவாக்க மே தினத்தில் உறுதியேற்போம். தொழிலாளர்கள் உரிமையைப் பாதுகாக்க தொய்வின்றிப் போராடுவோம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: வகுப்புவாத, மதவெறி பாஜக அரசை, அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும், நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவும் மே தினத்தில் சூளுரை ஏற்று, களப்பணி தொடர்வோம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தொழிலாளர்களின் உழைப்பால்தான் உலகமே இயங்குகிறது. எனவே, தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: பாட்டாளிகளின் உரிமைகளைப் பறிப்பது, அனைத்து துறைகளின் வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும். அதை உணர்ந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க அரசு முன்வர வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: போராடாமல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. நமது அடிப்படை உரிமைகள் அனைத்தையும் வென்றெடுக்கப் போராடுவோம், வெற்றி பெறுவோம்.
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்: நமது அன்றாட வாழ்க்கைக்குப் பின்னால் பல்லாயிரம் பாட்டாளிக் கரங்கள் உள்ளன என்பதை உணர்வதும், அவர்களின் உழைப்பைப் போற்றுவதும், உரிமைகளை உறுதி செய்வதும் நமது பொறுப்பு.
பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர்: நம் நாட்டை சமூகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி அடைந்ததாக மாற்ற தொடர்ந்து உழைப்போம்.
இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து: உழைக்கும் மக்களுக்கு உரிய பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் அமைத்துத் தருவதில் துணை நிற்போம்.
இதேபோல, வி.கே.சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, திருநாவுக்கரசர் எம்.பி. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் உள்ளிட்டோரும் மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.