லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று காலை விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 2 சிறுவர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து, போலீஸார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவக் குழுவினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் (என்டிஆர்எஃப்) முகாம் அமைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விஷவாயுவை சுவாசித்ததால், அந்தபகுதியை சேர்ந்த மேலும் 4 பேர் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 11 பேரில் 5 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள். அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கசிந்த வாயு சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் உள்ள ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென விஷவாயு வெளியேறியதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.ஆலையை சுற்றி 300 மீட்டர் தொலைவுக்கு வாயுக் கசிவு ஏற்பட்டதால் அக்கம் பக்கவீடுகளில் இருந்தவர்களும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் நீலநிறமாக மாறியதால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் வேதனை தெரிவித்துள்ளார்.