பழநி: காலிஃபிளவர் பூ ரூ. 15 வரை விற்பனையாவதால், அவற்றை சாகுபடி செய்யும் பழநி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. குறிப்பாக, ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், புலிக்குத்திக்காடு, பழநி அருகே குதிரையாறு அணை, பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் காலிஃபிளவர் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
பழநி குதிரையாறு அணை பகுதியில் காலிஃபிளவர் பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது அறுவடைப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு காலிஃபிளவர் பூக்கள் விற்பனைக்கு செல்கின்றன. தற்போது காலிஃபிளவர் சீசன் இல்லாத (ஆப் சீசன்) நிலையிலும் வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக ஒரு காலிஃபிளவர் பூ ரூ.10 முதல் ரூ.15 வரைக்கும் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பழநி பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், ”இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் காலிஃபிளவர் பயிரிட்டுள்ளனர். கட்டுப்படியான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். காலிஃபிளவர் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது,” என தெரிவித்தார்.