சென்னை : பொன்னியின் செல்வன் மகத்தான வெற்றியால் பல படவாய்ப்புகள் குவிந்து வருவதாக சரத்குமார் பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
சரத்குமார் : இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நான் இப்போது பேசுவது பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள். நான் எப்போதும் தமிழைத்தான் பேசுகிறேன். சில நடிகர்கள் பேசுவதில்லை நான் தொடர்ந்து பேசுகிறேன் அவ்வளவுதான் என்றார். நான் 40 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன்.நான் பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டுத்தான் இருக்கிறேன்.
கலைதான் என் தொழில் : கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன். ஆனால் இப்போது தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில் அதை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் அதைத் தொடர்ந்து தான், தற்போது நான் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். இதுவரை என்னை ஆதரித்த நீங்கள் என்னை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.
நல்ல கதாபாத்திரம் : பொன்னியின் செல்வன் பட புரமோசன் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள். ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரத்தை எனக்கு கொடுத்து இருக்கிறார். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தை அனைவரும் பாராட்டினார்கள்.

அனைவருக்கும் தெரிகிறது : சரத்குமார் யார் என்று தெரியாத இளம் தலைமுறையினர் விஜய்யின் வாரிசு படத்தின் மூலம் அவர்களும் என்னை தெரிந்து கொண்டார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு, ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தில் வில்லான நடித்திருக்கிறேன். அதற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், நான் அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன்.
பல படவாய்ப்புகள் : நான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் வாய்ப்புகள் வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது. அது பற்றி மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறேன். 2026ம் ஆண்டு ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி என்று சரத்குமார் பேசினார்