மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாலகமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சந்நிதியிலுள்ள 6 கால் பீடத்தில் இரவு 7.30 மணியளவில் மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றி, ரத்தினங்கள் இழைத்த செங்கோலை வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அம்மனின் ஆட்சி
பின்னர் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல், கோயில் துணை ஆணையர் ஆ.அருணாச்சலத்திடம் வழங்கப்பட்டது. செங்கோலைப் பெற்றுக்கொண்ட அவர், சுவாமி சந்நிதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் ஒப்படைத்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து நேற்று முதல் ஆவணி மாதம் வரை மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடப்பதாக கருதுவது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
பின்னர் இரவு 9 மணியளவில் மீனாட்சி அம்மன் பட்டத்து ராணியாக வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (மே 1) திக்விஜயம் நடைபெறும். மே 2-ல் திருக்கல்யாணம், மே 3-ல் தேரோட்டம் நடைபெறும்.