மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி குறித்து திரை பிரபலங்கள் பலரும் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 100-வது எபிசோட் நேற்று ஒலிபரப்பானது. இதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் சிறப்பு ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் மும்பையில் உள்ள ராஜ் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், மாதுரி தீக்சித், ஷாஹித் கபூர், ரோஹித் ஷெட்டி உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அவர்கள் பேசியவதாவது:
நடிகை மாதூரி திக்சித்: எளிய மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள பிரதமர் மோடி நேரம் ஒதுக்குகிறார். இது ஒரு அற்புதமான செயல். சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மனிதநேய பணிகளை மேற்கொள்ளும் மக்களை அவர் தொடர்பு கொள்கிறார். இது பலருக்கும் தெரிவதில்லை. எனவே அத்தகைய மக்கள் குறித்து நாட்டு குடிமக்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறார். இதன் மூலம் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கிறது.
நடிகர் ஷாஹித் கபூர்: பிரதமர் மோடி மக்களுடன் இணைந்திருக்க விரும்புகிறார். அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான அடையாளம் என்று நினைக்கிறேன். வரலாற்றில் இடம்பிடித்த அனைத்து தலைவர்களும், அது அரசர்களோ அல்லது பிரதமர்களோ, அவர்கள் மக்களுடன் இணைந்திருந்தனர்.நம் மனதில் இருப்பதை பேசவும், மக்களின் வார்த்தைகளை கேட்கவும், இதை விட ஒரு ஆழமான தொடர்பு இருக்க முடியாது. என்னை இங்கே பேச அழைத்ததை என்னுடைய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.
இயக்குனர் ரோஹித் ஷெட்டி: ஒரு சரியான தலைவரால் நமக்கு சரியான பாதையை காட்ட முடிந்தால், நம்மால் முடியாதது எதுவும் இல்லை. மக்களின் குரலை கேட்கும் ஒரு தலைவர் நமக்கு கிடைத்திருப்பது நமது அதிர்ஷடம். இது மிகவும் அரிதான ஒன்று.