சென்னை: இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது. அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று(திங்கள்) திமுக சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கியது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.