சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை நடைபெறுகிறது.
சட்டப்பேரவை 5-வது கூட்டத்தொடரின் 2-ம் கூட்டம் கடந்த மார்ச் 20-ல் தொடங்கி ஏப்.21 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில் துறையின்கீழ், 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் விதமாக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக மே மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலினும் வெளிநாடு செல்கிறார்.
இந்த சூழலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை (மே 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. பேரவையில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இதில் ஆலோசனை நடத்தப்படுகிறது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து விவாதித்து, அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் முதலீடு செய்யவும், விரிவாக்கம் செய்யவும் காத்திருக்கும் நிறுவனங்களுக்கான சலுகைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
அமைச்சரவை மாற்றமா?
சில அமைச்சர்கள் மீதான புகார்கள், அவர்களது உறவினர்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் முதல்வரின் கவனத்துக்கு சென்றுள்ளன. காவல் துறையினரும் பல்வேறு உளவுத் தகவல்களை முதல்வருக்கு அனுப்பியுள்ளனர். இதன் அடிப்படையில், அமைச்சரவையில் சிலமாற்றங்கள் இருக்கலாம் என்ற பரபரப்பும் நிலவுகிறது. சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம், புதியவர்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.