பெங்களூரு: தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, முந்தைய வாக்குறுதிகள் குறித்த நிலை அறிக்கையை பாஜக வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இன்று (திங்கள் கிழமை) பெங்களூருவில் வெளிட்டார். இந்த தேர்தல் அறிக்கை வெளியான சில மணி நேரத்தில், கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா பாஜகவுக்கு சவால் விடும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில், “கர்நாடக பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள முந்தைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும். பாஜக தலைவர்கள் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளைப் பொருட்படுத்துவதே இல்லை. கடந்த தேர்தலின் போது அவர்கள் கொடுத்த 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக கர்நாடாக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள், தினமும் அரை லிட்டர் நந்தினி பால், மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் உள்ளிட்ட 16 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் இந்த மாதம் 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடக்க இருக்கிறது.