மேட்டூர் மருத்துவமனையில் அதிநவீன ஆய்வகம் அமைக்க ரூ.1.25 கோடி: திமுக எம்பி செந்தில்குமார் வலியுறுத்தலை ஏற்ற மத்திய அரசு

புதுடெல்லி: மேட்டூர் அரசு மருத்துவமனையில் அதிநவீன ஆய்வகம் அமைக்க ரூ.1.25 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதற்காக, நாடாளுமன்ற மக்களவையின் திமுக எம்பியான டிஎன்வி.எஸ் செந்தில்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் மீதான தகவலை திமுக எம்பியான டாக்டர்.செந்தில்குமார் வெளியிட்டுள்ளார். பிரதமர் ஆயிஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு 15-வது மானிய குழு தேசிய சுகாதாரப் பணி திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்திற்கு ரூ.107 கோடியே 34 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் அதிநவீன மேம்பட்ட ஆய்வகம் தொடங்க ரூ.1.25 கோடியும் ஒதுக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான திமுக எம்பி டாக்டர். செந்தில்குமார் வலியுறுத்தலின் பேரில் ஒதுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர், நாடாளுமன்ற மக்களவையிலும், மத்திய சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியாவையும் நேரில் பார்த்து கோரிக்கை வைத்திருந்தார்.

இதே தொகையில், தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உள்ள அவசர பராமரிப்பு பிரிவிற்கு ரூ.23 கோடியே 75 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பென்னாகரம் தொகுதியில் உள்ள தாய் சேய் நலன் மையத்திற்கு ரூ.12 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் தர்மபுரி தொகுதியின் திமுக எம்பியான டாக்டர்.செந்தில்குமார் கூறும்போது, ‘மேட்டூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அதிநவீன ஆய்வகம் தொடங்குவது மூலம் மாவட்ட மருத்துவமனைகளில் உறுதியான சிகிச்சை அளிக்க முடியும்.

குறிப்பாக, தீவிர நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய் தொற்று காலங்களில் பொதுமக்களுக்கு சிகிச்சைக்கு பயனுள்ளதாக அமையும். எனவே இந்த திட்டங்களை தருமபுரி பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு கொண்டு வந்ததன் மூலம் தர்மபுரி மாவட்டம் மருத்துவத் துறையில் அடுத்த கட்டத்திற்கு செல்லும்’ எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.