என்எல்சி நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தினால் ஏக்கருக்கு 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று, கம்மாபுரம் அருகே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை உள்ளிட்ட ஆறு பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை மத்திய அரசின் மேற்கொண்டு வருகிறது. இதில் டெல்டா உள்ளிட்ட மூன்று பகுதிகளில் அண்மையில் ஏலம் விடப்பட்டதை எதிர்த்து பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.
அதுவும் முழுமையாக பின்வாங்காத நிலையில், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிலக்கரி எடுப்பதற்கு உண்டான சூழ்நிலை இருந்து வருகிறது.
மேலும் கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகத்தால் இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடும், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலையும் என்எல்சி நிர்வாகம் தரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில், கடலூர் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், என்எல்சி நிர்வாகம் ஏக்கருக்கு 40 லட்சம் ரூபாய் வழங்கினால் போதும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மேலும், நிறைந்த பணி வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தங்களது பூர்வீக நிலத்தை என்எல்சி நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டு, 40 லட்சம் ரூபாயை வைத்து அந்த மக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியையும் சமூக அலுவலர்கள் எழுப்பி வருகின்றனர்.
மேலும் பணம் கூட சம்பாதித்துக் கொள்ளலாம், பொன்விளைகின்ற பூமியை சம்பாதிக்க முடியுமா? உருவாக்கத்தான் முடியுமா? என்எல்சி நிர்வாகத்திடம் இந்த நிலத்தை கொடுத்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியாதா இந்த கிராம மக்களுக்கு? என்று, பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.