இன்றைய 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஆடின.
பெங்களூரு அணி கடந்த முறை லக்னோவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளிஸ்சிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக விளங்கியதால் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க முடியாமல் திணறினர். விராட் கோலி , டு பிளிஸ்சிஸ் இணை முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது.
ஆர்சிபி அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டு ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் பவுண்டரி அடித்து அசத்தினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டு பிளிஸ்சிஸ் 44 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய மஹிபால் லோப்ரோர் 3 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 126 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி ஆடியது
127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். தீபக் ஹூடா 1 ரன்னிலும், மார்கஸ் ஸ்டாய்னஸ் 13 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 9 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 23 ரன்னிலும், ரவி பிஷோனி 5 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். காயம் காரணமாக தொடக்க வீரராக களமிறங்காத கேப்டன் கேஎல் ராகுல் கடைசி விக்கெட்டிற்கு களமிறங்கினார். கடைசி ஓவரில் லக்னோ வெற்றிபெற 23 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி ஓவரை ஹர்சல் பட்டேல் சிறப்பாக வீசினார். இதனால் லக்னோ அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றிபெற்றது.