தலித் அரசியலை தாண்டி பொது சமூகத்திற்கான உரிமை குரலை ஒலிக்கும் முகமாக மாறி விட்டார் தொல்.திருமாவளவன். தனது விடுதலை சிறுத்தைகள் கட்சி மூலம் தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து அரசியல் செய்து வருபவர்.
திமுக
, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்தாலும் தவறுகளை சுட்டிக் காட்ட ஒருபோதும் தயங்கியது இல்லை.
திருமாவளவன் அரசியல்
அதேசமயம் திமுக தலைமை அளித்த நெருக்கடிகள், ஏற்படுத்திய சர்ச்சைகள் ஆகியவற்றை தாண்டி கூட்டணியில் தொடர்வது விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு செய்த கட்சியாக தற்போது காணப்படுகிறது. இதனை தேர்தல் அங்கீகரித்த கட்சியாக மாற்றவும், தனி சின்னம் பெறவும் திருமாவளவன் தீவிரம் காட்டி வருகிறார்.
தென்னிந்தியாவில் கிளைகள்
இந்த சூழலில் தேசிய அளவில் தனது கட்சியை முன்னிறுத்தும் வேலைகளில் மும்முரம் காட்டி கொண்டிருக்கிறார். சமீபத்தில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இங்கெல்லாம் திருமாவளவன் நேரில் சென்றிருந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறுகிறது.
டி.கே.சிவக்குமார் கடிதம்
இதன் பிரச்சார களம் திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, கர்நாடக மாநில
காங்கிரஸ்
கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். அதன்பேரில் அங்கு செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக கர்நாடக விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பாஜகவிற்கு ’நோ’
கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. அது தென்னிந்திய மாநிலங்களை வெகுவாக பாதிக்கும். அந்த வகையில் நாளைய தினம் கர்நாடகாவிற்கு புறப்படுகிறேன். இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளேன் என்று தெரிவித்தார். தமிழகத்திலும் காங்கிரஸ் – விசிக இடையில் இணக்கமான போக்கு தொடர்கிறது. இது கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வலுசேர்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
காங்கிரஸிற்கு ஆதரவு
அங்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்வதன் மூலம் தனக்கான மதிப்பை மேலும் உயர்த்தி கொள்ள திருமாவளவனுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது மக்களவை எம்.பியாக இருப்பதால் தேசிய அரசியலில் அறியப்படும் நபராக விளங்குகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட திமுக கூட்டணியில் சீட் கேட்க வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையில் தென்னிந்திய அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வலுப்படுத்தி கொண்டால் அதன் அரசியல் மவுசு வருங்காலத்தில் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.