சென்னை: வேலை நேர உரிமையை மறுக்கும் சட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திரும்பப் பெற்றது பாராட்டுக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பில் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023 நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் வேலை நேர உரிமையை மறுக்கும் இச்சட்டத்திற்கு எதிராக தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர், தொழிலாளர் துறை அமைச்சர், தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசிய நிலையில், தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் அறிவித்தார்.
இன்று (01.05.2023) தொழிலாளர் உரிமை தினமான 137-வது மே தினத்தில் பங்கேற்ற முதல்வர், தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 2023 முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது என்ற மகிழ்வான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த முதல்வருக்கும், அரசுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.” இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.