சென்னை: Ajith Birthday (அஜித் பிறந்தநாள்) அஜித்குமார் இன்று தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவர் செய்த சில தரமான சம்பவங்கள் குறித்து காணலாம்.
அஜித். இந்த பெயரை கேட்டாலே அனைவரும் ஆர்ப்பரிப்பார்கள். யாரின் துணையும் இல்லாமல் தனியாக சினிமாவுக்குள் நுழைந்து, பல முறை விழுந்து அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் எழுந்தவர் அஜித்குமார். உழைப்புக்கு அவரிடம் பஞ்சம் இல்லாததால்தான் என்னவோ உழைப்பாளர் தினமும், அவரது பிறந்த தினமும் ஒரே நாளாக அமைந்திருக்கிறது. இன்று அவர் தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அஜித் வழி தனி வழி: சினிமாவில் நடித்து அதன் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தை தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் நடிகர்கள் மத்தியில் அஜித் எப்போதும் தனி வழியில் செல்பவர். இதனாலயே அவரை பலரும் ரசிக்கின்றனர். அஜித் செய்த விஷயங்களை மற்ற நடிகர்கள் செய்வதற்கு கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வார்கள். அப்படி அவர் சில தரமான சம்பவங்கள் எப்போதுமே அஜித்தை தனித்து காட்டியிருக்கின்றன.
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா: அஜித் செய்த சம்பவங்களிலேயே ரொம்பவும் தைரியமான சம்பவம் என்றால் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அவர் பேசியதுதான். 2006 -2011 திமுக ஆட்சி செய்தது. அந்த சமயத்தில் கலைஞர் கருணாநிதிக்கு கலைத்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவுக்கு அஜித்தும் அழைக்கப்பட்டார். இன்னமும் சொல்லப்போனால் வரவழைக்கப்பட்டார்.
மேடை ஏறிய அஜித், யாருக்கும் அஞ்சாமல், சினிமாக்காரங்களை சினிமாக்காரங்களா இருக்க விடுங்க. விழாவுக்கு வந்தே ஆக வேண்டும் என்று உங்கள் கட்சிக்காரர்கள் மிரட்டுகிறார்கள் என கருணாநிதியிடமே பகிரங்கமாக தெரிவித்தார். இந்த பேச்சை கேட்டு அரங்கமே கப் சிப் என்று இருந்தபோது ரஜினிகாந்த் மட்டும் எழுந்து நின்று கைத்தட்டினார். அஜித்தின் அந்த பேச்சு இன்றுவரை யாராலும் செய்ய முடியாத அல்லது யாரும் செய்ய துணியாத ஒரு சம்பவம்.
மன்றங்களுக்கு நோ: ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு எப்படி தொண்டர்கள் பலம் முக்கியமோ அதேபோல் ஒரு நடிகருக்கு ரசிகர் மன்றங்கள் முக்கியம் என்ற மாயை ஒன்று இருந்தது. அதை சுக்குநூறாக உடைத்தவர் அஜித்குமார். தனது 50ஆவது படமான மங்காத்தா படத்தின்போது, தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அஜித்தின் கேரியர் அவரது இந்த முடிவால் முடிவுக்கு வரப்போகிறது என ஆரூடம் கூறினர். ஆனால் அவர் தனது மன்றங்களை கலைத்த பிறகுதான் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை கூடியது. அதுமட்டுமின்றி மங்காத்தா படம் மிகப்பெரிய ஓப்பனிங்கை பார்த்தது.
ப்ரோமோஷனுக்கு நோ: ஒரு படத்தில் நடித்தால் அந்த நடிகர் ப்ரோமோஷனுக்கு செல்ல வேண்டும் என்பது கோலிவுட்டில் எழுதப்படாத விதி. அப்படி ப்ரோமோஷனுக்கு செல்லவில்லை என்றால் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்களை கோலிவுட் வைக்கும். ஆனால் அஜித் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்னுடைய வேலை நடிப்பதோடு நின்றுவிட்டது என கூறி ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலோ, ஆடியோ வெளியீட்டு நிகழ்விலோ தலை காண்பிக்காமல் இருந்தது.
அவரது இந்த முடிவை பார்த்த பிறகுதான் ஒரு சில நடிகர், நடிகைகள் ப்ரோமோஷனுக்கு வருவதை தவிர்த்தனர். ஆனால் அஜித்தின் முடிவை ஏற்றுக்கொண்ட திரையுலகம், ப்ரோமோஷனுக்கு வராத மற்றவர்களை விமர்சித்தது. அதற்கு ஒரே காரணம், அஜித் தான் எடுத்த முடிவில் தீர்க்கமாக இருந்தார். அதேசமயம் நயன்தாரா உள்ளிட்டோர் தங்களது சொந்த படங்களுக்கான ப்ரோமோஷனில் கலந்துகொண்டு மற்றவர்களின் படங்களில் நடிக்கும்போது ப்ரோமோஷனுக்கு செல்லாமல் இருந்தார்கள்.
சோஷியல் மீடியாவா அப்படினா?: இப்போதைய காலம் டிஜிட்டல் காலமாக மாறிவிட்டது. ரசிகர்களுடன் கனெக்ட்டில் இருக்க வேண்டுமென்றால் சமூக வலைதள கணக்கு அவசியம் என்ற நிலை வந்திருக்கிறது. அதனால்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியிலிருந்து தளபதி விஜய் வரை என பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கணக்கு ஆரம்பித்து தங்களது அட்மினை வைத்து ட்வீட்டுகளை பதிவு செய்கின்றனர்.
அஜித் இதிலும் விதிவிலக்காக திகழ்கிறார். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைதளத்திலும் அவருக்கு கணக்கு இல்லை. சமூக வலைதளங்களில் கணக்கு இல்லை என்றால் ரசிகர்களுடன் கனெக்ட் ஆக முடியாதோ, அவர்களின் பல்ஸை தெரிந்துகொள்ள முடியாதோ என நடிகர்கள் யோசிப்பார்கள்.
ஆனால் சோஷியல் மீடியாவில் அக்கவுண்ட் எதுவும் ஆரம்பிக்காமல் தனக்கான ரசிகர்களை தக்க வைத்துக்கொள்வதற்கு மிகப்பெரிய ஆளுமை திறன் வேண்டும். அது அஜித்திற்கு வாய்க்கப்பெற்றிருக்கிறது. இப்படி தைரியமாக பல சம்பவங்களை செய்திருக்கும், செய்யப்போகும் அஜித்திற்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.