அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அப்பதவியில் இருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கி உள்ளனர். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆக முடியும் என்ற அடிப்படை விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். 5 ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக பணியாற்றி இருக்கவேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து, அடிப்படை தொண்டர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் பரிந்துரை

இவ்வாறு கட்சி சட்ட விதிகளின் அடிப்படைக்கு நேர் விரோதமாக செயல்பட்டு வந்த, நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய போலி பொதுக்குழு அறவே கலைக்கப்பட வேண்டும் என்றும், கட்சி உறுப்பினர்கள் மூலம் உண்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஏப்.24-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற கட்சி அடிப்படை உறுப்பினர்களின் மாநாடு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பரிந்துரை செய்தது.

அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு மே 1 முதல் கலைக்கப்படுகிறது. கட்சி உறுப்பினர்கள் யாரும் அந்த போலி பொதுக்குழு உறுப்பினர்களோடு தொடர்புகொள்ளக் கூடாது. புதிய பொதுக்குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில், உண்மையான கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும். அதன் பிறகு முறையான, நேர்மையான தேர்தல்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.