பெங்களூரு: சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே பைஜுஸ் நிறுவனம் இயங்கி வருவதாக அதன் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பைஜு ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ரவீந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது: முதலீடுகளைப் பெறுவதற்கு அந்நியச் செலாவணி சட்டங்களை முழுமையாக பின்பற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு பரிவர்த்தனைகள் அனைத்தும் எங்களின் முதலீட்டு நிதி ஆலோசகர்கள் மற்றும் பங்குதாரர்களால் முறையாக சரிபார்க்கப்பட்டுள்ளன.
பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் உரிய ஆவணங்களுடன் வழக்கமான வங்கி நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளன. 70-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பைஜுஸில் முதலீடு செய்துள்ளனர். அவர்களின் முழு கண்காணிப்பின் கீழ்தான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சட்டத்துக்கு இணங்கவே அனைத்து நடவடிக்கைகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகளும் விரைவில் இதே நிலைப்பாட்டுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு பைஜு ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
ரூ.1.80 லட்சம் கோடி மதிப்புடைய இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜுஸ் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி முதலீடுகளை பெற்றதாக வந்த புகாரையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் அதன் பெங்களூரு அலுவலகங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதில், பல ஆவணங்களையும், டிஜிட்டல் தரவுகளையும் கைப்பற்றியதாக அமலாக்கத் துறை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்தது.
மேலும், அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இதுகுறித்து விசாரிக்கப்படுவதாகவும் அமலாக்கத் துறை கூறியது. இந்த நிலையில், சட்டத்தை மீறிய எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை பைஜுஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும், அதன் பணியாளர்களுக்கும் உறுதியளிக்கும் வகையில் பைஜு ரவீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.