சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12.04 மணி வரை நடைபெற்றது. இதில் பன்னாட்டு தொழில் முனைவோர், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் வழிவகை குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல, தொழில்துறையில் ஏற்பட்டு இருக்கும் முன்னேற்றங்கள் குறித்து, அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.
அதேபோல, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிருக்கிறது. மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைமை குறித்தும், நிதிதுறையில் பெண்டிங்க் இருக்கும் கோப்புகள் குறித்தும் முழுமையாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.
கூட்டம் நிறைவுப் பெற்றது என்ற அறிவிக்கப்பட்டதும், முதல்வர் இருக்கையில் இருந்தும், பி.டி.ஆர் அவசர அவசரமாக அறையை விட்டு வெளியேறியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. கடந்த சில நாள்களாகவே ஆடியோ விவகாரம் குறித்து சர்ச்சைகள் வட்டமடிக்கவே, முதலில் பி.டி.ஆர் வெளியேறியது அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.
வழக்கமாக, அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றதும், முதல்வர்தான் முதலில் வெளியேறுவார். பின்னர், அமைச்சர்கள் ஒருவர்பின் ஒருவராக அறையை விட்டு வெளியேறுவார்கள். ஆனால், முன்கூட்டியே முதல்வரிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியேறி இருக்கிறார் பி.டி.ஆர். இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், “ஆடியோ விவகாரத்தை அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் சீனியர்கள் யாராவது எழுப்பலாம் என்ற நினைத்து அமைச்சர் பி.டி.ஆர், வெளியேறியிருக்கலாம்” என்றார்.