புதுடெல்லி: உக்ரைனின் பாதுகாப்புத் துறை அமைச்சம் வெளியிட்ட காளிதேவி குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிற்காக, அந்நாட்டு துணை வெளியுறவுத் துறை அமைச்சர் எமின் தபரோவா இன்று (மே 2) மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இந்து கடவுள் காளியை தவறான முறையில் சித்தரித்து ட்வீட் வெளியிட்டிருக்கிறது. நாங்கள் வருந்துகிறோம். உக்ரைன் மற்றும் அதன் மக்கள் இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை மதிக்கிறது. சர்ச்சைக்குரிய அந்த ட்வீட் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டது. இருதரப்பு உறவு மற்றும் நட்புறவை மேலும் அதிகப்படுத்துவதற்கு உக்ரைன் தீர்மானித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தற்போது உக்ரைன் பாதுகாப்புத் துறையால் நீக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ட்வீட்டில் இந்துக் கடவுளான காளி தவறான முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தார். கலை வேலைப்பாடு என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த ட்விட்டர் பதிவில் இணைக்கப்பட்டிருந்த படங்கள் ஒன்றில், குண்டுவெடித்து வரும் புகையின் மேலே காளியின் படம் வைக்கப்பட்டிருந்தது.
இந்தப்படம் இந்தியார்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்திருந்த இந்தியர்கள் உக்ரைன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இந்தியாவில் பரவலான மக்களால் வணங்கப்படும் காளி கடவுளை அவமதிக்கும் செயல் இது என கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உக்ரைன் மன்னிப்பு கோரியுள்ளது.
உக்ரைனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வந்து சென்ற சில வாரங்களில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை இவ்வாறு ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் ரஷ்யா உக்ரைனைத் தாக்கத் தொடங்கியதிலிருந்து இந்தியாவிற்கு வந்த முதல் உக்ரைன அமைச்சர் எமின் தபரோவா. தனது இந்திய வருகையின் போது, இந்தியாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மீனாட்சி லேகியை சந்தித்த எமின், உக்ரைன் ரஷ்ய போரில் இந்தியா தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை வழங்கினார்.