அங்காரா: ”சிரியாவில், துருக்கி படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில், ஐ.எஸ்., பயங்கரவாத குழு தலைவர் அபு ஹுசைன் அல்- குரைஷி சுட்டுக் கொல்லப்பட்டார்,” என, அந்நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான துருக்கி, அதன் அண்டை நாடான சிரியாவின் எல்லையில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 2020 முதல், வடக்கு சிரியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துருக்கி, ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ”சிரியாவில், துருக்கி படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில், ஐ.எஸ்., தலைவர் அபு ஹுசைன் அல்- குரைஷி சுட்டுக் கொல்லப்பட்டார்,” என, அந்நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஐ.எஸ்., தலைவர் அபு ஹுசைன் அல்- குரைஷியை, துருக்கியின் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நீண்ட காலமாக தேடி வந்தனர். இவர், சிரியாவின், அப்ரின் நகரில் உள்ள ஜிண்டிரெஸ் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்படி, அந்த இடத்தில் துருக்கி படைகள் சமீபத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், அபு ஹுசைன் அல்- குரைஷியை அவர்கள் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான எங்களது நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், ஐ.எஸ்., பயங்கரவாத குழு தலைவராக, அபு ஹுசைன் அல்- குரைஷி பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement