பெங்களூரு: கர்நாடகாவில் ஊழலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பிரதமர் மோடி ஏன் பேசுவதே இல்லை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி இன்று (மே 2) தீர்த்தஹல்லியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், “இப்போது கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு 3 ஆண்டுகளுக்கு முன்னால் ஜனநாயகத்தை சிதைத்து, ஆட்சி அதிகாரத்தை திருடிக் கொண்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த அரசு மக்களுக்காக என்ன நன்மை செய்தது என்பதுதான் தெரியவில்லை. இங்கே பிரச்சாரத்துக்கு வரும் பிரதமரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை.
பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்துள்ளார். ஆனால், அவர் இங்கேயும் அவரைப் பற்றி மட்டும்தான் பேசுகிறார். முதல்வர் பசவராஜ் பொம்மை பற்றியோ அவரது முன்னோடி எடியூரப்பா பற்றியோ மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா குறித்தோ எதுவும் பேசுவதில்லை. அதனால், பிரதமர் மோடி, தன்னைப் பற்றி பேசுவதை தவிர்த்து மக்கள் பிரச்சினைகள், மக்கள் வளர்ச்சி திட்டம் மற்றும் மாநிலத்துக்கு என்ன செய்துள்ளார் என்பதை குறித்து பேச வேண்டும்.
கர்நாடக மக்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். மே 10 என்பது நரேந்திர மோடிக்கான நாள் அல்ல. அது கர்நாடகாவின் எதிர்காலத்துக்கான நாள்.
மாநிலத்தில் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் பெருமளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அதைப் பற்றி கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் பாஜகவை ’40 சதவீத கமிஷன் அரசு’ என்று முத்திரை குத்தினார்கள். குழந்தைகள் கூட இதை ’40 சதவீத அரசு’ என்று அழைக்கிறார்கள். பிரதமருக்கு எல்லாம் தெரியும். பிரதமர் இங்கு வந்து இந்த மோசடிகள் பற்றி பேசுவதில்லை. ஒரு குழந்தைக்கு இங்கு ஊழல் தெரியும் என்றால், பிரதமருக்கு எப்படி தெரியாமல் போகும்? இங்கு ஊழலைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள். எத்தனை பேரை பதவி நீக்கம் செய்தீர்கள் என்பதை எல்லாம் மக்களிடம் சொல்லுங்கள்” என்றார்.
முன்னதாக, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மகளிருக்கு மாதம் ரூ.2000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் முழு விவரம்: கர்நாடக தேர்தல் | மகளிர்க்கு மாதம் ரூ.2000 முதல் பஜ்ரங் தள், பாப்புலர் ஃப்ரன்ட்டுக்கு தடை வரை.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்
இந்த தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, ‘பஜ்ரங் தள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தடை போன்ற காங்கிரஸ் வாக்குறுதிகள் முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் முயற்சி’ என்று கடுமையாக விமர்சித்துள்ளது. அதன் விவரம்: ‘முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் முயற்சி’ – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மீது பாஜக தாக்கு
224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் கர்நாடகாவில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.