கர்நாடாகாவில் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் மக்களிடம் ஆதரவை திரட்டி வருகின்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். அதில்வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிட்டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும். ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும்.
‘சர்வாரிகு சுரு யோஜனே’ திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்,. மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும். அத்துடன் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம், சட்டவிரோத குடியேறிகளை களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்றும் மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏராளமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3,000 நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலையில்லா டிப்ளமோ பயின்றவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும்.
பஜ்ரங் தல், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற மதம், சாதி சார்ந்து வெறுப்பை விதைக்க முயலும் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும்.பொதுப்பணித் துறையில் வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும்.
பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பாசனத்திட்டம், நகர்ப்புற வளர்ச்சி, மின் துறை அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு லஞ்சம் கண்டறியப்பட்டால் அவற்றைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றப்படும்.மாநிலத்தின் அனைத்து நீதிமன்றக் கட்டிடங்கள், வளாகங்களை நவீனப்படுத்த ரூ.2000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் வை ஃபை ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும்.மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கி 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல், அடிப்படை கல்வி, சுகாதாரம், அனைத்து பருவநிலைகளுக்கும் உகந்த சாலைகள் அமைக்கப்படும். * அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, கேழ்வரகு, கம்பு, சிறுதானியங்களில் எதை தேர்வு செய்கிறார்களோ அது 10 கிலோ வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தேர்தல் வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சி அமையும் முதல் நாளிலேயே முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமல்படுத்தப்படும் என்று மல்லிகார்ஜுன கார்கே உறுதியளித்தார்.