தான் காதலித்த பெண் தன்னைப் பிரிந்ததும், அவர் தன்னுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய நபருக்கு தக்க தண்டனை வழங்கியுள்ளது சுவிஸ் நீதிமன்றம் ஒன்று.
காதலிக்கும்போது நெருக்கமாக இருந்த காட்சிகள்
முன்பு புகைப்படங்களை சேகரித்து வைக்கும் மக்களைப் போல, இப்போதெல்லாம் காதலர்கள் பலர் தாங்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை தங்கள் மொபைல்களில் வீடியோவாக சேமித்துவைத்துக்கொள்கிறார்கள்.
அப்படி சேமித்துவைக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய மொபைல் போன்கள் பழுதாகும்போது, அவற்றை பழுதுபார்க்கும் சிலர், சில மென்பொருட்களைப் பயன்படுத்தி, அழிக்கப்பட்ட வீடியோக்களைக்கூட மீட்டெடுத்து ஆபாச இணையதளங்களுக்கு விற்றுவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட காட்சிகள் இணையத்தில் உலாவருவது தெரியவந்ததால் அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் உண்டு.
பிளாக்மெயில் செய்ய பயன்படுத்தப்படும் வீடியோக்கள்
இன்னும் சிலர், காதலிக்கும்போது காதலியுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு, காதலியைப் பிரிந்தபின், இந்த வீடியோக்களைக் காட்டி அவர்களை பிளாக்மெயில் செய்யும் விடயங்களும் நடக்கின்றன.
அவ்வகையில், சுவிட்சர்லாந்திலுள்ள Lucerne நகரில் வாழும் ஒருவர் தன் காதலியுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வீடியோ எடுத்துவைத்துள்ளார்.
அவர் தன் காதலியை அடித்ததால் அந்த பெண் அவரை விட்டுப் பிரிந்துபோயிருக்கிறார். உடனே அந்த 21 வயது இளைஞர், தன் காதலி தன்னுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
அந்த பெண் நீதிமன்றம் செல்ல, அந்த இளைஞரின் பின்னணியை விசாரித்துள்ளது நீதிமன்றம். அவர் சமூக ஊடகம் ஒன்றில் மொபைல் விற்பனை செய்வதாக பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மொபைல் கொடுக்காமல் ஏமாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது.
ஆகவே, அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ள நீதிமன்றம், அந்தப் பெண்ணை மிரட்டியதற்காக இழப்பீடு மற்றும் அபராதமாக 4,000 சுவிஸ் பிராங்குகள் வழங்கும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளது.