புதுடெல்லி: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மீண்டும் புதிதாக வாதங்களை எடுத்து வைக்க ஏதுவாக விசாரணைக்கான தடையை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று நீக்கி உத்தரவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி பாபர் மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அங்கு ராமர் கோயில் கட்டப்படுகிறது. அதேபோல் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான சர்ச்சை, கோயில் தேவஸ்தானத்துக்கும், அங்குள்ள மசூதி அறக்கட்டளைக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது.
மசூதிக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான உத்தரவை எதிர்த்து கோயில் தேவஸ்தானம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிவில் நீதிபதி கடந்த 2020-ம் ஆண்டு தள்ளுபடி செய்தார்.
மேல்முறையீடு
ஆனால், இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் சிவில் நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த மாவட்ட நீதிபதி, கிருஷ்ண ஜென்மபூமி நில ஒதுக்கீடு தொடர்பான விசாரணையை மீண்டும் நடத்தலாம் என்று உத்தரவிட்டார்.
மாவட்ட நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, முஸ்லிம்கள் தரப்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
மேலும், மாவட்ட நீதிபதியின் இந்த உத்தரவு வழிபாட்டு தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991-ஐமீறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ண ஜென்மபூமி தொடர்பான வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கிருஷ்ண ஜென்மபூமி சர்ச்சை வழக்கின் விசாரணை மீண்டும் புதிதாக தொடங்க வழிவகுக்கும் வகையில் அதற்கான தடையை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. உ.பி. சன்னி வக்பு வாரியம் மற்றும் ஷாஹி ஈத்கா அறக்கட்டளை தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி பிரகாஷ் பாடியா நேற்று பிறப்பித்த உத்தரவில், “மதுரா மாவட்ட நீதிபதி முன்பாக வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை புதிதாக முன்வைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.