கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவில்
சென்னை நிரஞ்சனா 2023 ஆம் ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ வும் மாவட்ட செயலாளர் புகழேந்தி கிரீடம் மற்றும் பட்டையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு தாலி கட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் மகாபாரதத்தை நினைவுறுத்தும் வகையில் நடைபெறும் 18 நாட்கள் சித்திரை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
சாகைவார்த்தலுடன் இந்த விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவில் பங்கேற்க ஏராளமான திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு இயல், இசை,நாடக மன்றம் சார்பில், ‘மிஸ் கூவாகம் – 2023’ நிகழ்ச்சி நடை பெற்றது.
நடந்த இப்போட்டியில் புதுச்சேரி உட்பட 42 மாவட்டங்களில் இருந்து 66 திருநங்கைகள் பங்கேற்றனர். இதில் 16 பேர் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தநிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் 16 திருநங்கைகளுக்கு அரசின் இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ‘மிஸ் கூவாகம் – 2023’ அழகிப் போட்டி யின் இறுதிச்சுற்று விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று மாலை நடந்தது. அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் மதிவேந்தன், உதயநிதி ஸ்டாலின், ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி,கடந்த அதிமுக ஆட்சியில் இது போன்று அமைச் சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் வரவில்லை. இன்று நாங்கள் வந்துள்ளோம். திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரே இயக்கம் திமுகதான். முன்னாள் முதல்வர் கருணாநிதி திருநங்கைகளுக்கான பல திட்டங்களை செயல்படுத்தினார். ‘திருநங்கைகள்’ என்று பெயர் வைத்து அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையை ஏற்படுத்தினார்.
திமுக ஆட்சி காலத்தில் திருநங்கைகளுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000-லிருந்து, ரூ.1,500 ஆக உயர்த்தி தரப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம்பலரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திருநங்கைகள் குறைகளைத் தெரிவிக்க 24 மணி நேரமும் எனது அலுவலகம் காத்திருக்கிறது. வருங்காலத்தில் திமுக மூலம் எம்எல்ஏ, எம்பிகளாகவும் திருநங்கைகள் வருவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றார். பலத்த மழை பெய்ததால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அழகி போட்டியில் 45 திருநங்கைகள் பங்கேற்று அதில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கான அழகி தேர்ந்தெடுப்பதற்கான போட்டி இன்று காலை விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருநங்கைகள் வண்ண வண்ண ஆடை அணிந்து மேக்கப் அணிந்து சினிமா மற்றும் பக்தி வேடமிட்டு நடனமாடி அசத்தினர்.
அதனைத் தொடர்ந்து அழகி போட்டியானது நடைபெற்றது அப்போது 16 திருநங்கைகளும் வண்ண வண்ண ஆடை உடுத்தி அலங்காரம் செய்து கொண்டு மேடையை அலங்கரித்து வந்தனர். இதனை தொடர்ந்து அதில் இரண்டாம் சுற்று ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டு அந்த ஏழு பேர்களுக்கும் பொது அறிவு மற்றும் எய்ட்ஸ் நோய் விழிப்புணர் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
அதன் அடிப்படையில் சிறப்பாக பதில் அளித்த மற்றும் அழகு, ஆடை, பாவனை இவற்றில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் சென்னை நிரஞ்சனா 2023 ஆம் ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ வும் மாவட்ட செயலாளர் புகழேந்தி கிரீடம் மற்றும் பட்டையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தை சென்னை டிஷா வும், மூன்றாம் இடத்தை சேலம் சாதனாவும் தட்டி சென்றனர். இவர்களுக்கும் பட்டயம் மற்றும் கேடயம் அணிவிக்கப்பட்டது மிஸ் கூவாகம் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கை அழகிகளுக்கு சக திருநங்கைகள் வாழ்த்து கூறி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மாலை திருநங்கைகளின் முக்கிய திருவிழாவான கூத்தாண்டவர் கோவில் அரவானை கணவானக நினைத்து திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரி கையினால் ஏராளமான திருநங்கைகள் வரிசையாக தாலிகாட்டிக்கொண்டனர். நாளையதினம் காலை தேரோட்டமும் அன்று மாலை பந்தலடியில் பாரதம் படைத்தலும், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதலும் நடைபெறுகிறது.
திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்வதற்குப் பின்னால், புராணக் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘மகாபாரத குருஷேத்ர போரில், பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், சகல லட்சணங்களும் பொருந்திய ஆண்மகன் ஒருவனை பலியிடவேண்டும் என்ற நிலை வருகிறது. அதற்கு, அர்ஜுனன் – நாக கன்னிகையின் புத்திரன் அரவான் முன்வருகிறான். ஆனால், திருமணமான ஒருவனைத்தான் பலிகொடுக்க முடியும் என்பது சாஸ்திரம். ஆகவே, அரவான் சிறிது நேரத்தில் பலி கொடுக்கப்பட்டுவிடுவான் என்பதினால் எந்தப் பெண்ணும் அவனைத் திருமணம் செய்துக்கொள்ள முன்வரவில்லை.
ஸ்ரீ கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அவனை மணந்துகொண்டார். எனவே, ‘பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சமானவர்களே திருநங்கைகள்’ என்று சொல்லப்படுகிறது. அரவானின் திருக்கண் திறக்கப்படும் நாளில் அரவானை கணவனாக எண்ணிக்கொண்டு பூசாரி கைகளால் தாலிக் கட்டிக்கொள்கின்றனர் திருநங்கைகள். நாளைய தினம் கூத்தாண்டவர் தேர் பவனி நடைபெறுகிறது. அரவாண் களப்பலி முடிந்த உடன் திருநங்கைகள் தங்கள் தாலியை துறந்து வெள்ளை புடவை அணிந்து தங்கள் கைகளில் அணிந்திருந்த வளையல்களை பூசாரிகள் கையால் உடைத்து கண்ணீருடன் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.