மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று காலை அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் மட்டுமின்றி தேசிய அரசியலில் நன்கு அறியப்பட்ட முகமாக பார்க்கப்படுவர் சரத் பவார். இவரது விலகல் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீப காலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சுற்றி சில சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.
தேசியவாத காங்கிரஸில் குழப்பம்
அதாவது, சரத் பவார் மீது அவரது அண்ணன் மகன் அஜித் பவார் அதிருப்தியில் இருப்பதாக பேச்சு அடிபட்டது. ஏனெனில் சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை கட்சியின் அடுத்த தலைவராக்க திட்டமிட்டுள்ளார். இதனால் தான் ஓரங்கப்பட வாய்ப்புள்ளதாக கருதுகிறார். எனவே சில எம்.எல்.ஏக்களை பிரித்து சென்று கட்சியை உடைத்து விடுவார். ஆளும் பாஜக அரசில் இணைந்து விடுவார் எனக் கூறப்பட்டது.
சரத் பவார் ராஜினாமா
தற்போது அக்கட்சிக்கு 53 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆனால் அஜித் பவார் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இத்தகைய சர்ச்சைக்கு மத்தியில் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவராக இருப்பவர் சரத் பவார். ஜூன் 1999ல் கட்சியை தொடங்கியதில் இருந்து தற்போது வரை இவரே தலைவராக தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித் பவார் அதிரடி
இந்நிலையில் சரத் பவார் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். சரத் பவாருக்கு தற்போது வயது 82. இருப்பினும் அவரே கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அஜித் பவார் அதிரடியாக ஏதும் செய்து விடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த தலைவர்
ஒருவேளை அனைவரும் தனது தலைமையின் கீழ் செயல்பட தயாராக இருக்கிறார்களா? என்பதை சரத் பவார் பரிசோதிக்க விரும்பலாம் என்ற கருத்தை அரசிய விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். அடுத்தகட்டமாக அஜித் பவாரா? சுப்ரியா சுலேவா? ஆகிய இருவரில் தலைவர் பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவில் பிரபலம்
ஒருவருக்கு அளிக்கும் பட்சத்தில் மற்றொருவர் அதிருப்தி அடைவர் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் அடுத்த தலைவர் யார் என சரத் பவார் ஒருமித்த முடிவு எடுத்து சொல்ல வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.
நான்கு முறை மகாராஷ்டிரா மாநில முதல்வர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், மத்திய விவசாயத்துறை அமைச்சர், மாநிலங்களவை எம்.பி, ஐசிசி மற்றும் பிசிசிஐ தலைவர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவர். 2019 சட்டமன்ற தேர்தலின் போது சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் தலைவராக சரத் பவார் இருந்தது குறிப்பிடத்தக்கது.