இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் விலை மிக குறைவாக துவங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் என்ஜின், வசதிகள், மற்றும் போட்டியாளர்கள் என முக்கியமானவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரில் 5 மற்றும் 7 என இருவிதமான இருக்கை ஆப்ஷனை பெற்று 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டிருக்கலாம். ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சற்று தாமதமாக அறிமுகம் செய்யப்படலாம்.
Citoren C3 AirCross
இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள சிறிய C3 காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டில் 90 சதவீத உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால் மிக குறைந்த விலை கொண்டதாக இருக்கும்.
C3 ஏர்கிராஸ் காரின் பரிமாணங்கள் 4300mm நீளம், 1796mm அகலம் மற்றும் 1654mm உயரம் கொண்டிருக்கின்றது. மற்ற போட்டியாளர்களை விட கூடுதலான வீல்பேஸ் 2671mm கொண்டிருப்பதுடன், வேறு எந்த போட்டியாளர்களிடமும் இல்லாத 200mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்ட காராகும்.
5 இருக்கை பெற்ற காரின் பூட் கொள்ளளவு 444 லிட்டர் மற்றும் 7 இருக்கை மாடலில் மூன்றாவது வரிசை இருக்கையை முழுமையாக நீக்க முடியும் என்பதனால் அதிகபட்சமாக 511 லிட்டர் பெற்றிருக்கும்.
சி3 ஏர்கிராஸ் காரில் முதற்கட்டமாக, 110PS பவர் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெறும். ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் சற்று தாமதமாக விற்பனைக்கு வரக்கூடும்.
இந்த காரில் டீசல் என்ஜின் வரப்போவதில்லை. ஆனால் எலக்ட்ரிக் ec3 ஏர்கிராஸ் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பாக்கலாம்.
காரின் இன்டிரியர் அம்சங்களை பொறுத்தவரை, 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, மேனுவல் ஏசி கண்ட்ரோல், இரண்டாவது வரிசை கூரையில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்கள் மற்றும் ஐந்து ஃபாஸ்ட்-சார்ஜர் போர்ட் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே பெற்றிருக்கும்.
சன்ரூஃப், வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் க்ரூஸர் கண்ட்ரோல் போன்றவை இடம்பெறுவது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.
பாதுகாப்பு வசதிகளில் இரட்டை முன் ஏர்பேக், டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகளை பெறுவது உறுதியாகியுள்ளது. ஆனால், அக்டோபர் 1 முதல் பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என்பதனால் சற்று தாமதமாக எதிர்பார்க்கலாம்.
C3 Aircross Rivals
இந்திய சந்தையில் C-பிரிவு எஸ்யூவி கடுமையான போட்டியாளர்களை கொண்டுள்ள பிரிவாகும். இந்த பிரிவில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற கார்களை சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் எதிர்கொள்ள உள்ளது.
இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனத்துக்கு C3 ஏர்கிராஸ் மாடல் மூன்றாவது காராகும். உள்நாட்டில் மட்டுமல்லாமல், பல்வேறு ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
சிட்ரோன் C3 Aircross விலை ₹ 9.00 லட்சத்தில் துவங்கலாம். விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளியாகலாம்.