சிந்து சமவெளி நாகரிகத்தை படமாக்க வேண்டும் : ராஜமவுலிக்கு தொழிலதிபர் கோரிக்கை

உலகின் மிகவும் பழமையான நாகரிகங்களில் ஒன்று சிந்து சமவெளி நாகரிகம். இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியாவின் வடமேற்குப் பகுதி ஆகிய பகுதிகளில் சுமார் 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரவியிருந்தது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வாழ்ந்த மக்கள் கட்டடக்கலை, அறிவியல், இலக்கியம், நிர்வாகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். தமிழ் மக்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்தற்காக ஆதாரங்களும் உள்ளன.

பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா சிந்துவெளி நாகரீகம் குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டு அதுதொடர்புடைய சில படங்களையும் பதிவிட்டிருந்தார். அதோடு “சிந்து சமவெளி காலகட்டம் தொடர்பாக ஒரு திரைப்படத்தை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு இயக்குநர் ராஜமவுலிக்கு கோரிக்கை விடுக்கிறேன். அது தொன்மை வாய்ந்த இந்த நாகரிகம் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்று எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ராஜமவுலி, “ஆமாம் சார், 'மகதீரா' படத்துக்காக தோலவிரா பகுதியில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த போது, புதைபடிவமாக மாறியிருந்த ஒரு பழமையான மரத்தை நான் பார்த்தேன். சிந்து சமவெளி நாகரிகத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த மரம் கூறுவது போல ஒரு கதையை யோசித்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றபோது, மொஹஞ்சதாரோ பகுதிக்குச் செல்ல முயற்சித்தேன். ஆனால் சோகம் என்னவென்றால், எனக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்று டுவீட் செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.