வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சூடானில் உள்நாட்டு போர் நிகழ்ந்துவரும் சூழலில், சேதமடைந்த ஓடுபாதையில் வெளிச்சமே இல்லாமல் நள்ளிரவு நேரத்தில் 121 இந்தியர்களை இந்திய விமானப்படை ரகசியமாக மீட்டு வந்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் வெடித்தது. தலைநகர் கார்தூம் உட்பட பல இடங்களில் வன்முறை வெடித்தது. அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை மீட்க அந்தந்த நாட்டு ராணுவத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ‛ஆபரேஷன் காவிரி’ என்ற பெயரில் இந்திய அரசு, போருக்கு மத்தியிலும் நம் நாட்டினரை துணிச்சலாக மீட்டு வருகின்றது. இதுவரை 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்.,27ம் தேதி நள்ளிரவில் இந்திய விமானப்படை துணிச்சலான சாகசத்தை நிகழ்த்தி 121 இந்தியர்களை மீட்டுள்ள சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, இந்திய விமானப்படையின் ‛சி-130ஜே-30′ என்ற கனரக விமானம் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் தலைவர் கார்தூமுக்கு வடக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள வாடி சயீத்னாவில் உள்ள ஒரு சிறிய ஓடுபாதையில் மின்சாரமோ, ஏர் டிராபிக் எனப்படும் வழிகாட்டுதலோ இல்லாமல் பெரிய சிக்கலுக்கு மத்தியிலும் விமானத்தை தரையிறக்கியதுடன் இந்தியர்களையும் மீட்டுள்ளனர்.
இது குறித்து விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது: நள்ளிரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கு வழிகாட்டும் விளக்குகள் கூட இல்லாமல் சேதமடைந்த ஓடுபாதையில், தடைகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு ‛எலக்ட்ரோ ஆப்டிகல்ஸ்’ மற்றும் ‛இன்ப்ராரெட்’ சென்சார்களை பயன்படுத்தி தரையிறக்கப்பட்டது. இரவு நேரத்தில் பார்ப்பதற்கான பிரத்யேக கண்ணாடிகளையும் பயன்படுத்தி தந்திரமாக செயல்பட்டனர்.
திக்.. திக்.. 7 நிமிடங்கள்
விமானம் தரையிறங்கிய அடுத்த வினாடியே 8 விமானப்படை கமாண்டோக்கள் துரிதமாக செயல்பட்டு அங்கு தயார் நிலையில் இருந்த இந்தியர்கள் மற்றும் அவர்களது உடைகளை விமானத்திற்குள் ஏற்றினர். விமானத்தின் இன்ஜின்கள் நிறுத்தப்படாமல் செயல்பாட்டிலேயே தயார் நிலையில் இருந்தது. வெறும் 7 நிமிடங்களில் 121 இந்தியர்களையும் பத்திரமாக விமானத்திற்குள் ஏற்றியதும், வெளிச்சமே இல்லாமல் விமானம் புறப்பட்டது.
சூடானில் போர் தொடர்ந்துவந்த நிலையில், துணிச்சலாகவும் ரகசியமாகவும் அவர்கள் இடத்திற்கே விமானத்தை செலுத்தி, மீட்டனர். அந்த நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருந்தால், மொத்த திட்டமும் தோல்வி அடைவதுடன், அத்தனை உயிர்களும் பாதிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய விமானப்படையின் இந்த ரகசிய ஆப்ரேஷன் மூலமாக 121 இந்தியர்களும் மீட்கப்பட்டனர். ஆனால் இதுவரை மீட்ட விமானிகள் பெயரோ, அல்லது அந்த குழுவில் இருந்தவர்கள் பெயரோ வெளியாகவில்லை. இந்தியாவின் இந்த துணிச்சல் முயற்சியையும், பிரதமர் மோடியையும் உலக நாடுகள் பாராட்டி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement