சென்னை டூ பெங்களூரு 6 வழிச்சாலை; தாறுமாறா வந்த சிக்கல்… இது 11வது தடவையாம்!

சென்னை டூ பெங்களூரு இடையிலான சாலை தென்னிந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இது தமிழகத்தை இருந்து ஆந்திர மாநிலம் வழியாக கர்நாடகா உடன் இணைக்கும் சாலை ஆகும். தொடக்கத்தில் இருவழிச் சாலை மட்டுமே இருந்தது. பின்னர் 4 வழிச் சாலையாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் 6 வழிச் சாலையாக அகலப்படுத்தினால் சரியாக இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்தது. ஏனெனில் சென்னை முதல் பெங்களூரு இடையில் வாகனப் போக்குவரத்து பெரிதும் அதிகரித்து விட்டது.

6 வழிச் சாலை திட்டம்

அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இல்லையெனில் நிலைமையை சரிசெய்வது மிகவும் கடினமாகி விடும். எனவே தான் 6 வழிச் சாலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் பல்வேறு பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஸ்ரீபெரும்புதூர் முதல் கிருஷ்ணகிரி இடையில் சாலையை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் பணிகள் நடக்கின்றன.

சென்னை டூ பெங்களூரு

இதற்கிடையில் பலமநேர் முதல் ஒஸ்கோட்டே வரை NH4-ல் 980 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வழித்தட திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஒப்புதல் கிடைக்காமல் டெல்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி விசாரிக்கையில் சாலை விரிவாக்கத்திற்காக கிராம மக்களிடம் இருந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நிலங்களை கையகப்படுத்தி விட்டது.

நிலம் கையகப்படுத்துதல்

ஆனால் அதற்கான இழப்பீடு தொகையை இன்னும் வழங்கவில்லை எனக் கூறுகின்றனர். இதனால் பலகட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த 6 வழித்தட திட்டத்தை விரைந்து முடித்து தருவதற்கு ஒப்பந்ததாரர்கள் பலரும் ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் டெண்டர் நடைமுறைகளை மத்திய அரசு நிலுவையில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெண்டர் ஒத்திவைப்பு

குறிப்பாக வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை – சித்தூர் இடையே 28 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை அகலப்படுத்துவதில் தான் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கான டெண்டர் 11வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி வரும் மே 11ஆம் தேதிக்குள் ஒப்பந்ததாரர்கள் உரிய டெண்டர் நடைமுறைகளை பின்பற்றி ஆவணங்களை தாக்கல் செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பாரபட்சமான நடவடிக்கை

டெண்டர் ஒத்திவைப்பிற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளப்பியுள்ளது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த எஸ்.யுவராஜ் கூறுகையில், தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது. இது போக்குவரத்தை மோசமாக்குவது மட்டுமின்றி விபத்துகளை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.