தமிழகத்தில் நில மேம்பாட்டு வங்கியை செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் நில மேம்பாடு வங்கியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து
அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூலத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் விவசாயி கே.ஆர்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், “விவசாயத்திற்காக நீண்ட தவணை கடன்கள் வழங்கும் சிறப்பு வங்கிகளாக நில மேம்பாட்டு வங்கிகள் முதன் முதலில் பஞ்சாப் மாநிலம் ஜாங் என்ற ஊரில் 1920ல் தொடங்கப்பட்டது. இந்த வங்கிகள் வேளாண்மை, வளர்ச்சி மற்றும் இதர துறைகளான தரிசு நிலம், பண்ணை சாரா துறை வளர்ச்சி, விவசாய பொருட்கள் வாங்குவதற்கான உதவிகள் போன்றவற்றில் இலக்கை அடையும் வகையில் செயல்படத் தொடங்கின.

1980களின் இறுதியிலும், 1990களின் தொடக்கத்திலும் இந்த நில மேம்பாட்டு வங்கிகள் நீண்ட கால தவணையாக குறைந்த வட்டியில் விவசாய கடன்களையும், கிராம மேம்பாட்டு செயல்களான சிறு மற்றும் குடிசைத் தொழில்கள், கிராம கைவினைஞர்கள் ஆகியவற்றுக்கு கடன்களையும் வழங்கியது.நில மேம்பாட்டு வங்கியின் முக்கியக் குறிக்கோள் வேளாண் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் அதன் உற்பத்தியை பெருக்குதலாகும். இந்த வகையில் தமிழ்நாட்டில் 180 இடங்களில் நில மேம்பாட்டு வங்கிகள் செயல்பட்டு வந்தன. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றனர்.

விவசாயிகளின் நிலங்களுக்கு குறைந்த வட்டியில் நீண்டகால கடன்களை வழங்குவதால் விவசாயம் உற்பத்தியும் அதிகரிக்கும். இந்த வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு கடந்த 2006ல் ரூ.986.12 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், தற்போது நில மேம்பாட்டு வங்கிகளில் நகை கடன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு கடன் தரும் திட்டம் படிப்படியாக நிறுத்தப்பட்டுவிட்டது.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாய உற்பத்தியையும் பெருக்கும் வகையில் நில மேம்பாட்டு வங்கியை மீண்டும் கொண்டுவர வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மனு கொடுத்தேன். அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, இந்த வங்கியை விவசாயிகள் பயன்பெரும் வகையில் மீண்டும் பழைய நடைமுறைக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மகாவீர் சிவாஜியும், அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமாரும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நில மேம்பாட்டு வங்கியையும், தேவையான நிதியுடன் அது தொடர்புடைய அமைப்புகளையும் உருவாக்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டுமே தவிர நீதிமன்றம் இதில் உத்தரவு எதுவும் பிறப்பிக்காது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.