5 வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சில முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, 5 வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நிர்வாக ஒப்புதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது.
கேட்டர்பில்லர், மலேசியாவைச் சேர்ந்த பெட்ரோனஸ் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர், அமைச்சர்களுடன் முதல்வர் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது, குடியரசுத் தலைவர் வருகை, மதுரையில் திறக்கப்படவுள்ள கருணாநிதி நூற்றாண்டு நினைவு நூலகம், திருவாரூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
newstm.in