புதுடில்லி:சர்ச்சைக்குரிய, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
‘லவ் ஜிகாத்’ கருத்தை மையப்படுத்தி, இயக்குனர் சுதிப்தோ சென், தி கேரளா ஸ்டோரி என்ற படத்தை எடுத்துள்ளார். இது, வரும் 5ல், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ‘டிரெய்லர்’ வெளியானது.
இதில், கேரளாவைச் சேர்ந்த ஹிந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, இஸ்லாம் மதத்துக்கு கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
மேலும், இந்த பெண்கள் மேற்காசிய நாடான சிரியா மற்றும் தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு, ‘செக்ஸ்’ அடிமைகளாக்கி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்ற காட்சிகளும் இதில் இருந்தன.
இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள ஆளுங் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், இப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கறிஞர் நிஜாம் பாஷா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, மனுதாரர்கள் வாதிட்டதாவது:
இந்த படத்தின் கதை வெறுப்பு பேச்சை அடிப்படையாகக் கொண்டது. பிரசார நோக்கத்துக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வெறுப்புப் பேச்சில் பல வகைகள் உள்ளன. ஒருவர் மேடையில் ஏறி, வாய்க்கு வந்தபடி பேசுவது போன்ற தல்ல இது. இந்த படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துள்ளது.
படத்தை தடை செய்ய வேண்டுமானால், நீங்கள் தணிக்கை வாரியம் போன்ற, சம்பந்தப்பட்ட துறையில் தான் முறையிட வேண்டும்.
மேலும், இதற்காக உயர் நீதிமன்றத்துக்கு செல்லாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதும் தவறு. எனவே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்