தமிழக முழுவதும் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்ட கிராம சபை கூட்டம் நா.முத்தையாபுரத்தில் நடைபெறாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கண்ணிலும் வாயிலும் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் கிராம சபை நடைபெறும் இடத்திற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர், 4 வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.
ஆனால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாக கண்ணிலும் வாயிலும் கருப்பு துணி கட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் 4 வார்டு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், திருச்செந்தூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.