கர்நாடாகாவில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிக்கும் மே 10-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.
தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் மக்களிடம் ஆதரவை திரட்டி வருகின்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. இந்த சூழலில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகம், தினமும் அரை லிட்டர் இலவச பால் விநியோகம் உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
- ஏழைகளுக்கு மாதந்தோறும் இலவசமாக 5 கிலோ அரிசி, பருப்பு வழங்கப்படும். வீடற்ற ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள். பட்டியல் இனத்தவருக்கு ரூ.10 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகையாக 5 ஆண்டுக்கு வழங்கப்படும். பழமையான கோயில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
- விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
- ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
- திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
- மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.
- ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
- அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.
- மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும்.
- ‘சர்வாரிகு சுரு யோஜனே’ திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்,.
- மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும். அத்துடன் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம், சட்டவிரோத குடியேறிகளை களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்.
- மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.