சென்னை: மட்டமான அரசியலுக்கு விளம்பரம் தேடித் தர விரும்பவவில்லை என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரலில் உதயநிதி, சப்ரீசன் பற்றி வெளியான ஆடியோ சர்ச்சை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர், மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவவில்லை என்று தெரிவித்துள்ளார்.
முதல்வரிடம் எழுப்பப்பட்ட கேள்வியும், அதற்கு முதல்வர் அளித்த பதிலும் பின்வருமாறு:
கேள்வி: நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பதில்: இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணிகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதைப் பற்றி பேசி, மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவவில்லை.
இவ்வாறு முதல்வர் பதிலளித்துள்ளார். முன்னதாக நேற்று காலை முதல்வர் ஸ்டாலினை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்தார். இந்நிலையில் முதல்வர் இன்று இந்த விளக்கத்தைக் கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இந்தச் சூழலில் அது ‘போலியானது’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்திருந்தார்.
இன்று அமைச்சரவை கூடும் சூழலில் பிடிஆர் இலக்கு மாற்றப்படலாம் என்று சலசலப்புகள் எழுந்த நிலையில் முதல்வரின் இந்த விளக்கம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
அமைச்சரவைக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 2021 மே 7-ம் தேதி பொறுப்பேற்றது. இதையடுத்து, கடந்த ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. முதலில், போக்குவரத்து துறையை கவனித்து வந்த அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து அத்துறை எஸ்.எஸ்.சிவசங்கருக்கு வழங்கப்பட்டது. ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். பின்னர், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், சில அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, வரும் மே 7-ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த சூழலில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பெற்றுள்ள முதல்வர் சில மாற்றங்களை செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக செயல்படாத அமைச்சர்களை மாற்றிவிட்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும், சில அமைச்சர்களுக்கு துறைகளை மாற்றி வழங்கவும் அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் சங்கரன் கோவில் எம்எல்ஏ ராஜா அல்லது மானா மதுரை எம்எல்ஏ தமிழரசி நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழரசி ஏற்கெனவே இத்துறையின் அமைச்சராக இருந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம் என தெரிகிறது.