சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிகாலையில் சென்னைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர், மேம்பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலியானார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுள்ளிபாளையத்தை சேர்ந்த லோகேஷ், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் விடுமுறை காரணமாக சொந்த ஊர் சென்றிருந்தார்.
இன்று அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் சென்னை நோக்கி புறப்பட்ட லோகேஷ் ராசிபுரம் – ஆத்தூர் சாலையில் வந்துக் கொண்டிருந்த போது, ஆத்தூர் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை கவனிக்காமல் தனது பைக்குடன் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து நடந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுவதாக எந்தவித எச்சரிக்கை பலகையும், தடுப்புகளும் வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அதிகாலை நேரம் என்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்தாரா? அல்லது அதிவேகத்தால் இந்த விபத்து ஏற்பட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.