சென்னை: மகாத்மா காந்தியின் பெயரனும், எழுத்தாளருமான அருண் காந்தியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் பெயரனும் எழுத்தாளருமான அருண் காந்தி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அருண் காந்தி மகராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (மே 2) காலை காலமானார். கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயோதிகத்தின் காரணமாக அவர் உயிரிழந்ததை, அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும், அருண் காந்தியின் இறுதி சடங்குகள், செவ்வாய்கிழமை மாலை கோலாப்பூரில் நடைபெறும் என்று அவரது மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.
மகாத்மாக காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தி. மணிலால் காந்தி – சுசிலா தம்பதியின் மகனாக, 1934ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் அருண் காந்தி. மகாத்மா காந்தியின் வழியில் அரசியல் மற்றும் சமூகப் போராளியாக அடையாளம் காணப்பட்டவர் அருண் காந்தி என்பது நினைவுகூரத்தக்கது.