புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கின் இரண்டாவது துணை குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா பெயரை அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை இணைத்துள்ளது.
முன்னதாக, முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் முன்னாள் செயலாளர் சி. அரவிந்த், முன்னாள் முதல்வர் வீட்டில் வைத்து அவருக்கும், ராகவ் சத்தாவுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என்று விசாராணையின் போது தெரிவித்திருந்தார்.
மேலும் அந்தக் கூட்டத்தில் பஞ்சாப் காலல்துறை ஆணையர் வருண் ரூஜம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜய் நாயர் மற்றும் பஞ்சாப் கலால் இயக்குநரகத்தைச் சேர்ந்த பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கின் இரண்டாவது துணை குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா பெயரை அமலாக்கத்துறை இன்று இணைத்துள்ளது. சிபிஐ முதல் முறையாக மணீஷ் சிசோடியாவை குற்றவாளி எனக்கூறி டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சில நாட்கள் கழித்து அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.