கந்தசாமி ஐபிஎஸ் குட்பை சொல்லிவிட்டார். தமிழ்நாடு காவல்துறையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறைக்கு அடுத்த டிஜிபி யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி தீயாய் பரவி வந்தது. இதற்கு பதில் சொல்லும் வகையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், சிபிசிஐடி பிரிவு டிஜிபியாக இருந்த அபய் குமார் சிங், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
IAS அதிகாரிகள் எண்ணிக்கை குறைய காரணம் இது தான்
கந்தசாமி ஐபிஎஸ் ஓய்வு
ஏற்கனவே கந்தசாமி ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றதும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை ஒரு ரவுண்ட் வந்தார். வழக்குகள் பாய்ந்ததே தவிர நடவடிக்கைகள் எடுத்த மாதிரி தெரியவில்லை. இந்த சூழலில் அபய் குமார் சிங் ஐபிஎஸ் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் இவரது பின்னணி குறித்து தெரிந்து கொள்ளலாம்.
புதிதாக அபய் குமார் சிங் ஐபிஎஸ்
1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி. பிகார் மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். தென் மண்டல ஐஜி, சென்னை மாநகரின் கூடுதல் காவல் ஆணையர், திருநெல்வேலி மாநகரின் காவல் ஆணையர், ராமநாதபுரத்தில் துணை ஐஜி, மதுரை எஸ்.பி உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
டிஜிபி அந்தஸ்து
அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றதை அடுத்து, அவரது பதவிக்கு புதிதாக அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டார். பின்னர் ஆயுதப்படை ஏடிஜிபியாக பணியாற்றி வந்தார். இதையடுத்து சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். சிபிசிஐடி இயக்குநர் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் நபரே நியமிக்கப்படுவார்.
ஸ்டாலின் அதிரடி
ஆனால் ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த அபய் குமார் சிங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ஏடிஜிபி அந்தஸ்திற்காக அந்த பதவி பணியிறக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அடுத்த சில மாதங்களில் டிஜிபி அந்தஸ்திற்கு அபய் குமார் சிங் பதவி உயர்வு பெற்றார்.
ஆக்ஷனில் இறங்குவாரா?
இந்த சூழலில் இன்றைய தினம் (மே 2) லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இனி இவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சைலண்ட் மோடா? இல்லை ஆக்ஷன் மோடா? என்பது ஸ்டாலின் கண் அசைவில் தான் இருக்கிறது என்கின்றனர் காவல்துறை வட்டாரங்கள்.