வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் தொடரும் கனமழை; குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்பு

சென்னை: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்றும் நாளையும் (மே 2, 3) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மே 2) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

மே 3-ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மே 4 முதல் மே 6 ஆம் தேதிகள் வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழ்நாடு பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 நேரத்தில் தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும், 11 இடங்களில் மிக கனமழையம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வானமாதேவி பகுதியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு (மே 3,4) தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், சேலம் நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்குவங்க கடல் பகுதி, தமிழக கடற்கரை பகுதிகள், மன்னர் வளைகுடா குமரி கடல் பகுதிகள் மாலத்தீவு லட்சத்தீவு பகுதிகளில் சூறைக்காற்று காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் அடுத்தவரும் இரண்டு தினங்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்

வருகின்ற மே 6ம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி அதன் காரணமாக அதற்கடுத்த நாட்களில் (மே 7,8 தேதிகளில்) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகக்கூடும். அதன் வலு மற்றும் நகர்வுக்கு ஏற்ப மழை, வெயில் வாய்ப்பு மாறுபடலாம் என்பதால் தொடர்ந்து கண்காணிக்கபடுகிறது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.