அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய போதிலும், இலங்கை அணி பங்கேற்கும் வெளிநாட்டு; போட்டிகளில் வெற்றி பெறுவது ஒரு நாடு என்ற வகையில் மிகவும் முக்கியமானது என இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
‘அயர்லாந்துக்கு எதிரான போட்டி முழுவதும் நன்றாக இருந்தது. இந்த போட்டியில் வெற்றிபெற்றதையிட்டு ஒரு தலைவராக நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஆனால் ஒரு கிரிக்கெட் அணியாக நாம்; இதை விட ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். டெஸ்ட் போட்டியில் அயர்லாந்தை விட பலமான அணிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றியடைய வேண்டும். குறிப்பாக வெளிநாடுகளில் நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் தயாராக வேண்டும். வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் அதிகளவான ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்’ என்றும் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார்.