கோலாலம்பூர்: மலேசியாவில் பட்டிமன்றத்துக்கு சென்ற திமுக நட்சத்திர பேச்சாளருமான திண்டுக்கல் ஐ லியோனிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவரை சூழ்ந்த மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ‛‛எங்களுக்கு வேறு வேலை இல்லையா? ஊருக்கும், உலகத்துக்கும் மட்டும் தான் உபதேசம் செய்வீர்களா?” என கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டிமன்றம் நடத்தி புகழ்பெற்றவர் திண்டுக்கல் ஐ லியோனி. ஆசிரியராக பணியாற்றிய இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். நீண்டகாலமாக திமுகவில் செயல்பட்டு வரும் லியோனி அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக உள்ளார்.
மேலும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் லியோனி செயல்பட்டு வருகிறது. இப்போதும் கூட வெளிநாடுகளில் அவர் பட்டிமன்றம் நடத்தி வருகிறார். குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவில் அவர் பட்டிமன்றம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் மலேசியாவில் பெனாங் என்ற இடத்தில் லியோனியின் பட்டிமன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 5 மணிக்கு பட்டிமன்றம் எனக்கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் வழங்கினர். இதையடுத்து மலேசியா வாழ் தமிழர்கள் ஏரளமானவர்கள் பட்டிமன்றத்துக்கான டிக்கெட்டை பெற்றனர். இதையடுத்து அவர்கள் பட்டிமன்றத்தின் அரங்கத்தில் காத்திருந்தனர். ஆனால் லியோனி குறித்த நேரத்துக்கு வரவில்லை.
இதற்கிடையே தான் தாமதமாக அரங்கத்துக்கு லியோனி உள்ளிட்டவர்கள் வந்தனர். அவர்களை மற்றவர்கள் வழிமறித்து தாமதத்தை சுட்டிக்காட்டி கண்டித்தனர். காரில் இருந்து இறங்கிய லியோனியை பார்த்து, ‛‛மணி எத்தனை அய்யா.. ஊருக்கு உபதேசம் பண்ணுறீங்க.. உலகத்துக்கு உபதேசம் பண்ணுறீங்க.. உங்களை நம்பி நாங்கள் இவ்வளவு தூரம் வந்து மோசம் போகவேண்டுமா?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு லியோனியுடன் வந்தவர், ‛‛எங்களை ஆர்க்கனைசர் தான் அழைத்து வர வேண்டும். எங்களுக்கு இடம் தெரியாது. நாங்கள் ஊரில் இருந்து வந்துள்ளோம். 5 மணிக்கு நிகழ்ச்சி என எங்களிடம் சொல்லவில்லை. எங்களிடம் 7 மணி என்று தான் கூறினார்கள்” என்றனர். இதற்கு, ‛‛5 மணி என்று தான் டிக்கெட்டில் போட்டுள்ளனர். நாங்கள் 2 மணிநேரமாக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களுக்கு வேறு வேலையில்லையா?. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்தால் தான் உள்ளே விடுவோம்” என கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து லியோனி, ‛‛உங்களை மகிழ்ச்சிப்படுத்த தான் நாங்கள் வந்துள்ளோம். உங்களை கஷ்டப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. 3 மணிக்கு பட்டிமன்றம் வைத்திருந்தால் கூட நாங்கள் வந்திருப்போம். எங்களை சரியான நேரத்துக்கு அழைத்து வரவில்லை” என்றார். இருப்பினும் பொதுமக்களின் கோபம் என்பது தணியவில்லை.
இந்த வேளையில் சிலர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். லியோனி அரங்கத்துக்குள் அழைத்து செல்லப்பட்டார். அங்கும் அப்போதும் வாக்குவாதம் ஏற்பட்டது. எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது?. எங்களுக்கு என்ன வேலை இல்லையா? என அவர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் மேடையில் இருந்தவர் மன்னிப்பு கோரினார். இருப்பினும் அவர்கள் ஏற்கவில்லை. மாறாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பணத்தை திரும்ப தர வேண்டும் என கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.