சென்னை: மட்டமான அரசியல் என்று முகத்தில் அடித்தார்போல் மு.க.ஸ்டாலின் கொடுத்த பதில் காரணமாக பிடிஆர் ஆடியோ லீக் சர்ச்சை முடிவுக்கு வந்தவிட்டதாகவே கருதப்படுகிறது.
ஆனால் பிடிஆர் பேசியதாக ஏதேனும் ஆடியோக்கள் வெளியானால் நிலைமை மோசமாகவிடும் என்று பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள். பாஜக அவ்வளவு எளிதாக இந்த விவகாரத்தை விட்டுவிடாது என்றும் கூறுகிறார்கள்.
ஆடியோ லீக் சர்ச்சையால் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பதவி பறிக்கப்படலாம் என்று வெளியான ஊகச் செய்திகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆனால் ஆடியோ லீக் சர்ச்சை இத்துடன் ஓயவில்லை என்றும் திட்டங்கள் குறித்தோ அல்லது அரசு குறித்தோ மேலும் ஆடியோக்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியானால் சிக்கலாகும் என்கிறார்கள். அதுமட்டுமின்றி பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை பாஜக குறிவைக்கிறதா, திமுக அவரை தனித்து விடுகிறதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
அண்மையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியானது. முதல் ஆடியோவில் “உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்,” என்று இருந்தது.
இரண்டாவது ஆடியோ பதிவில், “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவளித்து வருகிறேன். பா.ஜ.கவிடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டுமல்லவா? எல்லா முடிவுகளையும் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும்தான் எடுக்கின்றனர். நிதியை மேலாண்மை செய்வது சுலபம். இப்படி ஒரு அமைப்பு இருக்க முடியாது. They are taking the bulk of the spoils. முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே. அவர்களை நிதியளிக்கச் சொல்லுங்கள்” என்று இருந்தது.
இந்த ஆடியோக்களில் இரண்டாவது ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே நேரடியாக வெளியிட்டார். இந்த ஆடியோ பொய்யானது என்று கீழ்தரமான அரசியல் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமும் அளித்தார். அதன் பின்னர் திமுக தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.
எனினும் திமுகவின் சொத்துப்பட்டியல் என்று கூறி அண்ணாமலை வெளியிட்ட தகவலுக்காக அவர் மீது வழக்கு தொடரப் போவதாக அறிவித்த அக்கட்சி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விஷயத்தில் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்படாது என்று நேரடியாகவே அறிவித்தது. திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இதுதொடர்பாக அளித்த பேட்டியில் பிடிஆரின் சொந்த விஷயம் என்று கூறி முடித்துக் கொண்டார்.
இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலினும் இன்று வெளியிட்ட வீடியோவில் “இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே 2 முறை விளக்கம் அளித்துவிட்டார். இந்த மட்டமான ஆடியோ அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை. மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மட்டமான அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை” என்று கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு காரணமாக பிடிஆர் ஆடியோ லீக் சர்ச்சை முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. ஆனால் இதில் இன்னொரு சிக்கல் இன்னமும் இருப்பதாகவே பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறுகையில், இதுவரை வெளிவந்த 2 ஆடியோக்களுமே முழுமையாக வரவில்லை, யாருடன் பேசிய ஆடியோ என்பதும் தெரியவில்லை.
ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலையும் இந்த ஆடியோ எப்படி கிடைத்தது என்று வெளிப்படையாக இதுவரை அறிவிக்கவில்லை. மேலும் ஆடியோவின் உண்மை தன்மை நிரூபிக்கப்படவில்லை.
இப்போதைய நிலையில் பிடிஆர் ஆடியோவை வைத்து ஒட்டு மொத்த திமுகவையும் குறிவைக்கும் பா.ஜ.க., இதை அவ்வளவு எளிதில் விட்டுவிடாது
பி.டி.ஆர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஏதேனும் ஆடியோ மீண்டும் வெளியானால் நிலைமை மோசமாக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.