புதுடெல்லி: மனதின் குரல் 100-வது நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய தொழிலதிபர் பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு இந்தியாவினால் எளிதாக தீர்வு காண முடியும். பல நெருக்கடிகளை உலகம் எதிர்கொண்டாலும், அந்த நெருக்கடிகளுக்கு தீர்வுகளை வழங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது’’ என்று புகழாரம் சூட்டினார்.
அண்மையில் டெல்லி வந்த பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். மோடியின் தலைமையில் இந்தியா அபாரமாக வளர்ச்சி அடைந்து வருவதாக அவர் புகழாரம் சூட்டினார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா பணியாற்றுகிறார். அந்த நிறுவனத்தில் பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் பணியாற்றி வருகிறன்றனர். மேலும் பில்கேட்ஸின், கேட்ஸ் பவுண்டேஷன் ஆப் இந்தியா சார்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பில்கேட்ஸ் கடந்த 29-ம் தேதி ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். “தூய்மை பணி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றத்தில் மனதின் குரல் முக்கிய பங்குவகிக்கிறது’’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எனது நண்பர் பில்கேட்ஸின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது பூமியை சிறப்பானதாக மாற்ற வேண்டும்என்று இந்தியர்கள் விரும்புகின்றனர்.
இதுவே பில்கேட்ஸின் விருப் பமும் ஆகும். இந்திய மக்களின் ஆன்மாவை மனதின் குரல் பிரதிபலிக்கிறது. பூமியை சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்பதை முன்னிறுத்தி கேட்ஸ் பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.