15 ஆண்டுகள் உளவு வேலை…! அணு ஆயுத ரகசியங்களை இங்கிலாந்திற்கு அனுப்பிய ஈரான் பாதுகாப்புத்துறை முன்னாள் துணை மந்திரி

தெஹ்ரான்,

ஈரான் பாதுகாப்புத்துறையின் துணை மந்திரியாக 1997 முதல் 2005 வரை பணியாற்றியவர் அலிரிசா அக்பரி. இவரை கடந்த 2019-ம் ஆண்டு ஈரான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகவும், நாட்டின் ராணுவ ரகசியங்கள், அணு ஆயுத ரகசியங்கள், முக்கிய அதிகாரிகளின் விவரங்களை எதிர் நாடுகளுக்கு ரகசியமாக தெரிவித்ததாகவும் தேசதுரோகத்தில் ஈடுபட்டதாகவும் கூறி அலிரிசா அக்பரியை ஈரான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அலிரிசா அக்பரியை கடந்த ஜனவரி மாதம் ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியது. அலிரிசா அக்பரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அலிரிசா அக்பரி 15 ஆண்டுகளாக இங்கிலாந்திற்கு உளவாளியாக செயல்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து உளவு அமைப்பான எம்ஐ6-க்கு அலிரிசா ரகசிய தகவல்களை கொடுத்துள்ளார். 2004-ம் ஆண்டு முதல் அலிரிசா உளவு வேலையில் ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

2004-ம் ஆண்டு ஈரான் அணு ஆயுத சோதனை மையங்களின் இடங்கள் தொடர்பான விவரங்களை இங்கிலாந்து உளவு அமைப்பிற்கு அலிரிசா ரகசியமாக கொடுத்துள்ளார். மேலும், அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வரும் ஈரானிய அதிகாரிகள் குறித்த விவரங்களையும் அலிரிசா கொடுத்துள்ளார்.

இந்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் 2008-ம் ஆண்டு இங்கிலாந்து உளவு அமைப்பின் மூத்த அதிகாரிகள் இஸ்ரேலுக்கு சென்று விவரங்களை இஸ்ரேல் உளவு அமைப்பிற்கு தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுத ஆய்வில் ஈடுபட்ட மூத்த விஞ்ஞானிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஈரானிய அதிகாரிகளின் விவரங்களை அலிரிசா இங்கிலாந்திற்கு கொடுத்துள்ளார். இந்த தகவல்களின் அடிப்படையில் கடந்த நவம்பர் 2020 -ம் ஆண்டு ஈரானிய அணு ஆயுத மையத்தின் மூத்த விஞ்ஞானி மொஹ்சென் பக்ருசஹிதா மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் கொலை செய்ததாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது.

அலிரிசா அக்பரி ரகசிய தகவல்களை அனுப்பியதற்காக அவருக்கு இங்கிலாந்து உளவு அமைப்பு சுமார் 20 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) சன்மானமானமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அலிரிசாவுக்கு 2009-ம் ஆண்டு இங்கிலாந்து உளவு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதனால், அலிரிசா உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அவருக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்கப்பட்டது.

ஆனால், பல ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் 2019ம் ஆண்டு ஈரான் சென்றார். மீண்டும் உளவு வேலையில் ஈடுபட முயன்றபோது அப்போது அவரை ஈரான் அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அலிரிசா தூக்கிலிடப்பட்டார்.

அதேவேளை, அலிரிசா இங்கிலாந்து உளவு அமைப்பிற்கு உளவு வேலை பார்த்ததை ரஷிய உளவு அமைப்பு கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் அணு ஆயுத தயாரிப்பு தொடர்பான விவரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு தெரியவந்ததது எவ்வாறு? என்பது குறித்து கண்டுபிடிக்க ஈரான் அரசு ரஷியாவின் உதவியை நாடியுள்ளது.

இதனை தொடர்ந்து ரஷிய உளவு அமைப்பு மேற்கொண்ட ரகசிய ஆய்வில் அலிரிசா தான் அணு ஆயுத தகவல்களை இங்கிலாந்திற்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், அலிரிசா தங்கள் நாட்டிற்கு உளவு வேலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு இங்கிலாந்து மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை, அலிரிசா தங்கள் நாட்டிற்கு உளவுவேலை செய்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத இங்கிலாந்து, அமெரிக்க உளவுத்துறை முன்னாள் அதிகாரிகள் தெரிவித்ததாக பிரபல அமெரிக்க நாளிதழ் தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.