அகமதாபாத்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.
இதனையடுத்து ராகுல் பேச்சை முன்வைத்து அவருக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் கடந்த மார்ச் 23-ந் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 24-ந் தேதி ராகுல் காந்தியின் லோக்சபா எம்பி பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டது. அவர் வெற்றி பெற்ற வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு எதிரான இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்தது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தை முடக்கிப் போராட்டம் நடத்தினர்.
இதன்பின்னர் கடந்த 3-ந் தேதி குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 13-ந் தேதி விசாரித்த சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 20-ல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. ஏப்ரல் 20-ந் தேதி 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
இதனால் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் போது, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் தரப்படவில்லை என அவரது சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக்சிங்வி வாதிட்டார். இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று மே 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.