இன்றைய 44-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆட்டத்தின் முதல் பந்திலேயே பிலிப் சால்ட் ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் வார்னர் 2 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ரூசோவ் 8 ரன்னிலும், மனீஷ் பாண்டே 1 ரன்னிலும், பிரியம் கர்க் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியில் 20 ஓவர்களுக்கு 8விக்கெட் இழப்புக்கு 130ரன்கள் டெல்லி எடுத்தது. குஜராத் சார்பில் ஷமி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து131 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சகாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். சகா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். சுப்மன் கில் 6 ரன்கள் எடுத்த நிலையில் கேட்சாகி வெளியேறினார். விஜய் சங்கர் 6 ரன்னிலும், மில்லர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினர். தொடக்கத்திலேயே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி தடுமாடி வந்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், அபினவ் மனோகரும் சரிவில் இருந்து மீட்டனர்.
கடைசி இரு ஓவர்களில் அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19 வது ஓவரில் திவாட்டியா 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அந்த ஓவரை சிறப்பாக வீசிய அவர், ராகுல் திவாட்டியாவின் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன், அந்த ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா கடைசி வரை களத்தில் இருந்தும், அணியை அவரால் வெற்றிபெறச்செய்யவில்லை. கடைசியில் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.